கன்னியாகுமரி
மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் ஆய்வு
|வைக்கல்லூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க உத்தரவிட்டார்.
கிள்ளியூர் தாலுகா தாமிரபரணி ஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கல்லூர், பரக்காணி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு உட்பட்ட பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கடந்த 16-ந் தேதி அன்று அதிகாலை சிற்றாறு அணையில் இருந்து மறுகால் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிள்ளியூர் தாலுகா தாமிரபரணி ஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கல்லூர் ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2 வீடுகள் சேதமடைந்து சாலையில் அரிப்பு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண் மூடைகள் அடுக்கப்பட்டு வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்கப்பட்டது. தற்போது மழையினால் பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர தீர்வு காண்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்திட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைப்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்டல அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாவுக்கு உட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூடைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள், மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.