நாகப்பட்டினம்
கலெக்டர் தொடங்கி வைத்தார்
|நாகை புதிய கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணியினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகை புதிய கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணியினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
பனை விதைகள் விதைக்கும் பணி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டம் புதிய கடற்கரையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பனை விதைகள் விதைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார்.
பனை தடுப்பு அரண்கள்
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,
பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பனை நடுவதை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுங்கு, பதநீர், பனைமட்டை, நார், ஓலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு எனப் பனையின் பயன்கள் மிக அதிகம். தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் பனைமரமே விளங்குகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனைமரம் நடும் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள 117 கி.மீ அளவிற்கு கடற்கரை பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சுமார் 75 கி.மீ அளவிற்கு "வருமுன் காத்திடுதல் நன்று" என்பதற்கேற்ப பேரிடர் மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக உயிரி தடுப்பு அரண்கள் அமைத்திடும் பொருட்டும் பனைவிதைகள் நடும்பணி நாகை புதிய கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ளது.
நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம் ஆகிய 3 வட்டங்களிலுள்ள 26 கடலோர கிராமங்களில் பனை தடுப்பு அரண்கள் அமைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்துறை அலுவலர்களால் பனை விதைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
5 லட்சம் பனை விதைகள்
இப்பணியானது ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் பனைவிதைகளை நடும் வகையில் வருகிற 8-ந் தேதி வரை பசுமை வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தொடர்ந்து நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தொழிலாளர் நல வாரியம், நாட்டு நலப்பணித்திட்டத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.