< Back
மாநில செய்திகள்
புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
மாநில செய்திகள்

புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
22 March 2023 12:15 AM IST

விழுப்புரத்தில் வருகிற 25-ந்தேதி புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மாபெறும் புத்தக திருவிழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நகராட்சி திடலில் புத்தக திருவிழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சி.பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாவை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கட்டுரை போட்டி

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்த விழா வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழாவை காண்பதற்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்திடும் வகையில் பெருந்திரள் வாசிப்பும், மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை உள்பட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் சிறப்பு சொற்பொழிவு, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

சிறப்பு பஸ் வசதி

இதுமட்டுமல்லாமல், பாரம்பரிய உணவுத்திருவிழாவும், மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. புத்தக திருவிழாவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்