கரூர்
கலெக்டர் பிரபுசங்கர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
|77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று கரூரில் கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 34 பேருக்கு ரூ.93 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதான புறாக்களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இல்லம் தேடி கல்வி, பொதுப்பணித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 225 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். மேலும் 34 பேருக்கு ரூ.92 லட்சத்து 98 ஆயிரத்து 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சியில் கரூர் இசைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் பள்ளி, நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அன்பாலயம் காது கேளாதோர் பள்ளி, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீசார் அணிவகுப்பின் போது பெண் காவலர் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சக போலீசார் மீட்டு ஆசுவாசப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற வளாகத்தில்...
இதேபோல் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் ரெயில் நிலையத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ரெயில் நிலைய மேலாளர் சேவியர் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ரெயில் நிலைய ஊழியர்கள், ரெயில்வே போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கரூர், தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் மாறுவேடம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தலைமை ஆசிரியர் பரணிதரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.