ராமநாதபுரம்
கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
|காந்திஜெயந்தியையொட்டி வெள்ளரி ஓடை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டார்.
பனைக்குளம்,
கிராமசபை கூட்டம்
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரி ஓடை ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று ஊராட்சியின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதன் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து தீர்மானங்களை நிறைவேற்றுவதாகும். கிராம சபையில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலு சேர்க்கக் கூடிய ஒன்றாகும். அது மட்டுமின்றி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிராம சபை கூட்டம் பயனுள்ளதாக அமையும். எனவே அனைவரும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
எண்ணற்ற திட்டம்
முதல்-அமைச்சர் கிராமப்புறத்தில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற தொடர்புடைய அலுவலர்களை அணுகி பயன் பெற்றிட வேண்டும் என்று பேசினார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை தொடர்பாக பேசியதை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
மஞ்சப்பை விழிப்புணர்வு
இதை தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கலெக்டர் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், ஒன்றிய குழு உறுப்பினர் பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சந்தோசம், மண்டபம் யூனியன் ஆணையாளர் நடராஜன், வெள்ளரி ஓடை ஊராட்சி தலைவர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், ஊராட்சி துணை தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் கோவிந்தராஜ், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.