< Back
மாநில செய்திகள்
உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

தினத்தந்தி
|
23 March 2023 1:48 PM IST

உலக தண்ணீர் தினத்தையொட்டி பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துக்கொண்டார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது பாண்டேஸ்வரம் கிராமம் என்பது பெரிய நகர்ப்புற ஊராட்சியாகும். இந்த ஊராட்சி சென்னை நகர எல்லைக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு ஊராட்சி. அப்படியிருந்தாலும் இந்த ஊராட்சியில் அதிக அளவில் சாகுபடியும், விவசாயமும் நிறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு மிகப்பெரிய ஏரியும் அமைந்துள்ளது.

இந்த கூட்டத்தில் மின்சாரம் விநியோகிப்பதில் சில பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் விவசாயத்திற்கான இணைப்பு குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பஸ் வழித்தடம் குறித்து பிரச்சினை உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த வருடம் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இந்த ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற நல்லதொரு விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வருடம் இந்த ஊராட்சியில் கட்டாயமாக குறைந்தது ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்