< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி
|
22 Aug 2023 1:38 PM IST

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுவான பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 87 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 41 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 34 மனுக்களும் பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 74 மனுக்கள் என மொத்தம் 293 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அந்தந்த துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டம் சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி தொகையாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான வரைவோலையை கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்