< Back
மாநில செய்திகள்
கலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடி ஏற்றினார்
திருச்சி
மாநில செய்திகள்

கலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடி ஏற்றினார்

தினத்தந்தி
|
16 Aug 2023 2:59 AM IST

கலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடியை ஏற்றினார்,

சுதந்திர தின விழா

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஆயுதப்படை மைதானம் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உடனிருந்தார்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தி, நினைவு பரிசு வழங்கினார். இதனை தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் என்று 445 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதில் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீதுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், நெகிழி ஒழிப்பு திட்டம், அலுவலக நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ததற்காக, சிறந்த செயல்பாட்டுக்கான பாராட்டு சான்றிதழ் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 157 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் எதிரே உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கலை நிகழ்ச்சிகள்

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டுப்பற்று, தேச ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். முடிவில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை மூவர்ணத்தில் தேசியக்கொடி போல் பீய்ச்சி அடித்ததுடன், தீயணைப்பு கருவிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

விழாவில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், துணை கமிஷனர்கள் செல்வகுமார், அன்பு, மாவட்ட வருவாய் அதிகாரி ரா.அபிராமி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோட்டக்கலைத்துறை சார்பில் நம்ம திருச்சி என்ற பெயரில் கைவினை கலைஞர்களால் தர்பூசணியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மகாத்மாகாந்தி, நேதாஜி, வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் செதுக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்