காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கும் விதமாக 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு முனைப்பு இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில், எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் வரை நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு இயக்கம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இயக்கத்தின் முதல் நிகழ்வாக அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் இணைந்து "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். பின்பு தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின் செயல்பாடுகளாக பொது கழிப்பிடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு, குடிநீர் சுகாதாரம் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்து மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் விழிப்புணர்வு அளித்தல், பிளாஸ்டிக் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
ஆகியவற்றை "நம்ம ஊரு சூப்பரு" முனைப்பு இயக்கத்தின் செயல்பாடுகளின் மூலம் முன்னெடுத்து கிராம சபை தீர்மானங்களாக நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக் குழு துணைத்தலைவர் திவ்யபிரியா, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.