அரியலூர்
திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
|அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார்.
கணக்கெடுக்கும் பணி
அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனித உயிரிழப்புகளை தடுத்திடும் வகையில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.திறந்தவெளி கிணறுகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவற்றுக்கு உயரமான உறுதியான சுற்றுச்சுவர் அமைத்திட அதன் உரிமையாளர்களை அறிவுறுத்தவும், மேலும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகள் விபத்துகளை தடுத்திட உடனடியாக மூடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குவாரி குழிகளுக்கு...
கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்துவதை தடுத்திடும் வகையில் கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உடனடியாக வேலி அமைத்திட அதன் உரிமையாளர்கள் மற்றும் குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறிப்பாக நெடுஞ்சாலைகளில், கட்டுமான குழிகள் மற்றும் அகழிகளை நிவர்த்தி செய்வது அவசியம்.
கட்டுமான இடங்களில் வலுவான தடுப்புகளை நிறுவவும், ஒளிரூட்டும் ஒட்டுவில்லைகளை ஒட்டவும், அவை சாலை பயன்படுத்தும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க, இந்த அபாயகரமான இடங்களுக்கு அருகே உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவும் தங்கள் குழந்தைகளை அப்பகுதிக்கு விளையாட அனுமதிக்க வேண்டாம்.
அவ்வாறு இருந்தால் அதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய உரிமையாளர்கள்/ குத்தகைதாரர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளார்.