ராமநாதபுரம்
அரசின் மானிய கடன் திட்டங்கள் மக்களை சேர வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்
|அரசின் மானிய கடன் திட்டங்கள் மக்களை சென்று சேர வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
அரசின் மானிய கடன் திட்டங்கள் மக்களை சென்று சேர வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து கலெக்டர் பேசியதாவது:- அரசின் மானிய திட்டங்கள் வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு சென்றடைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம் தாட்கோ, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் மற்றும் கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
மானிய கடன் திட்டங்கள் வங்கியின் மூலம் வழங்குவதால் தேர்வு செய்யப்பட்ட துறைகள் பயனாளிகளுக்கான மானிய தொகையினை வங்கிகளுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் கடன்களை எளிதாக திருப்பி செலுத்தி வருகின்றனர். வங்கி அலுவலர்கள் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து பயனாளிகளுக்கான கடன் தொகையினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உறுதுணையாக
தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் அவர்களின் முயற்சி மேலும் அதிகரிக்கும். எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்காக பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும். நபார்டு வங்கி மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்கள் குறித்து கிராம பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு நபார்டு வங்கியின் பங்களிப்பு அதிகம் உண்டு. அரசு துறைகளின் சார்பில் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேரும் வரை வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.