< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
சிவகங்கை
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
5 May 2023 12:15 AM IST

குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

திறன் வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான கருத்தரங்கம், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகளை பேணிக்காப்பதற்கும், சிவகங்கை மாவட்டத்தினை குழந்தைகள் நட்பு மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு மனநலம் தொடர்பான உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கும், கண்காணிப்பதற்கும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நேய வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில், 1098 என்ற எண் மூலம் வரப்படும் புகார்களின் அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகளும் காணப்படுகிறது.

போக்சோ சட்டம்

இந்த கருத்தரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கென நடைமுறையிலுள்ள சட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் மற்றும் சட்டமுறைகள் எடுத்துரைக்கப்படவுள்ளது. மேலும், போக்சோ சட்டம் மற்றும் இளைஞர் நீதிச்சட்டம் குழந்தைகளுடைய வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்புடையதாக இருப்பதால், காவல் துறையை சார்ந்த அலுவலர்கள் முழு கவனத்துடன், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான சட்டம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில், அதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மற்றும் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி வழக்குப்பதிவு செய்தபின் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போலீஸ் நிலையங்களில் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, குழந்தைகள் நேயத்துடன் அணுக வேண்டும்.

குற்றங்களை தடுக்க

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய இழப்பீட்டு நிதியினை பெற்று தருவதற்கும், மேலும் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்பதற்குமான நடவடிக்கைகளில் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், போக்சோ நீதிமன்றம் மற்றும் மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி சரத்ராஜ், நீதித்துறை நடுவர் அனிதா கிறிஷ்டி ஆகியோர் பேசினர். போக்சோ சிறப்பு வழக்கறிஞர் தனலெட்சுமி, அரசு வழக்கறிஞர் சகிலாபானு, பயிற்சியாளர் குமார், நன்னடத்தை அலுலர் ராஜ்குமார் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி. சாய் சவுந்தர்யன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்