விருதுநகர்
அரசின் திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
|அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு கிராம உதவியாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு கிராம உதவியாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.
பயிற்சி வகுப்பு
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க செய்கின்ற பணிகளில் கிராம உதவியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதன்படி கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
ஒத்துழைப்பு
பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள் வருவாய்த்துறையில் கிராம அளவில் திட்டங்கள் செயல்படுத்துதல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பிரச்சினைகளை ஆரம்ப காலகட்டங்களில் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.
எனவே இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்கள் கிராமங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.