விருதுநகர்
போதை பொருட்களை ஒழிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்
|தேசிய இளைஞர் தினத்தையொட்டி போதை பொருட்களை ஒழிக்க மாணவர்கள் உறுதியேற்க வேண்டுமென கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
தேசிய இளைஞர் தினத்தையொட்டி போதை பொருட்களை ஒழிக்க மாணவர்கள் உறுதியேற்க வேண்டுமென கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
தேசிய இளைஞர் தினம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:- சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் இன்று தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்கள் இளமைக்கால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி காலங்களில் விளையாட்டாக ஆரம்பிக்கும் போதை பழக்கவழக்கம் எதிர்கால வாழ்க்கையை அழித்துவிடும். அவற்றை தவிர்க்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும். எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை தடுப்பதற்கும், அதனை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதுணையாக இருக்க வேண்டும்.
உறுதிமொழி
சுவாமி விவேகானந்தர் உன் வாழ்க்கை உன் கையில் என்ற பொன்மொழியின் அடிப்படையில் போதை பொருட்களை தவிர்த்து நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற இந்த தேசிய இளைஞர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நடந்த பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த நாடகங்கள் மூலமும், போதை அது சாவின் பாதை, போதையை வளர்க்காதே வாழ்க்கையை இழக்காதே, போதையின் பாதை அழிவின் பாதை போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.