சிவகங்கை
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வெடிகளை அரசு அனுமதித்த நேரத்தில் வெடிக்க வேண்டும்
|சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தீபாவளி திருநாள்
தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
பசுமை பட்டாசுகள்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்றும் கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல், பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பசுமைப்பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.