கிருஷ்ணகிரி
தோட்டக்கலை பண்ணையில் செடிகள், விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
|குருபரப்பள்ளி:-
ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் செடிகள் மற்றும் விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஜீனூர் அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை பண்ணையில் செடிகள் மற்றும் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர், தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நடவு பொருட்கள், குழித்தட்டு நாற்றுகள், ஒட்டுச்செடிகள், ஒட்டு கட்டும் முறை மற்றும் இதர நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகளை பார்வையிட்டு, அரசு தோட்டக்கலைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நாற்றுகள், விதைகள்
மேலும் மா, மாதுளை, சீதா, கொய்யா, நெல்லி, பப்பாளி, தென்னை, மருத்துவ மூலிகை செடிகள், முருங்கை மற்றும் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, மிளகாய், கத்திரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் மற்றும் விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தற்போது தட்டைபயிர், அத்தி, முள்சீத்தா செடிகள் புதியதாக உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும் இப்பண்ணையில் முன்னோடி திட்டமாக ஆரஞ்ச், டிராக்கன் பழ செடிகள் உற்பத்தி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய நீர்த்தேக்கத் தொட்டியினையும், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கப்படவுள்ள 100 ஏக்கர் நிலத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பூபதி, துணை இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.