தூத்துக்குடி
பனிமயமாதா ஆலய தங்கத்தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
|தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா தங்கத் தேரோட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத் தேரோட்டம் நடக்கிறது. அதன்படி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (சனிக்கிழமை) தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பனிமயமாதா ஆலயத்துக்கு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தங்கத்தேர் செல்லும் வழித்தடத்தை பார்வையிட்ட அவர், தேர் எளிதாக செல்லும் வகையில் போதுமான அகலத்தில் சாலை உள்ளதா? சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
தேரோட்டத்தின்போது மின்ஒயர்களை அகற்றுவது, எந்தவித இடையூறும் இன்றி தேரோட்டம் நல்ல முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் கவுரவ்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.