< Back
மாநில செய்திகள்
கோபி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
14 July 2022 3:29 AM IST

கோபி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

கோபி

கோபி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

காய்கறி பந்தல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடிவகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம்

இதில் குறிப்பாக கொடிவகை காய்கறிகளான பீர்க்கன், புடலங்காய், அவரை மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டேர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகை பந்தல் மூலம் கொடிவகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும் அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்துகொண்டு நல்லமுறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கிகொள்ளவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

பள்ளிக்கூடத்தில் ஆய்வு

மேலும் கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கலெக்டர் சென்றார். அங்கு பணியாளர் வருகை பதிவேடு, சத்துணவு, மாணவர்கள் சேர்க்கை பதிவேடு, உணவுபொருட்கள் இருப்பு பதிவேடு, இணைஉணவுகள் தொடர்பான பதிவேடு, வரவு செலவு பதிவேடு, சுவை பதிவேடு மற்றும் பார்வையாளர் குறிப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். சத்துணவுதிட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் சத்துணவு மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்த மதியஉணவினை சுவைத்து பார்த்தார்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்