ராணிப்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
|மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் மத்திய, மாநில அரசின் நிதி ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்களாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே அறை, ஸ்கேன் செய்யும் அறை, கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டு வரும் புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, இளநிலை பொறியாளர் சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.