அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
|அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் 13 தூர்வாரும் பணிகள் 42.80 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓடைகள் மற்றும் வடிகால்கள் நடைபெறும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மருதையாறு வடிநிலக்கோட்டத்தில் அரியலூர் வட்டத்தில் பெரிய நாகலூர் ஓடை, அருங்கால் ஓடை, உடையார்பாளையம் வட்டத்தில் சோழமாதேவி கிராமம் 4-வது புதிய பிரதான வாய்க்கால், சிந்தாமணி ஓடை, சுத்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வாய்க்கால், கருவாட்டு ஓடை (பொன்னேரி வரத்து வாய்க்கால்) ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார். அனைத்து பணிகளையும் விரைவாகவும், முழுமையாகவும் வருகிற 31-ந்தேதிக்குள் முடித்து கரைகளை பலப்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், பாசன வாய்க்கால் மூலமாக பயனடையும் விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்தும், இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில் தற்போது வரை 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடையும் போது சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடையும் என்று கலெக்டரிடம் தெரிவித்தனர். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.