விழுப்புரம்
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
|விழுப்புரம் நகரம், கோலியனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாநில பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லூரில் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியும், காவணிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேலமேட்டில் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு கட்டுமான பணியை மேற்கொள்ளும்படியும், அதே நேரத்தில் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுக்கழிப்பறை
அதனை தொடர்ந்து ஆனாங்கூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சி.பழனி பார்வையிட்டார். தொடர்ந்து, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.36.28 லட்சம் மதிப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பொது கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், அதன் கட்டுமானப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜவேல், ஜானகி, ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி உள்பட பலர் உடனிருந்தனர்.