புதுக்கோட்டை
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
|ஆவுடையார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61.53 லட்சம் மதிப்பீட்டில் காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கள்ளக் காத்தான் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட பணிகளை ஆய்வு செய்தார். மேலும் வேட்டனூர் மேல குடியிருப்பு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், வேட்டனர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள், ஆவுடையார்கோவில் ஆதிதிராவிடர் அரசினர் மாணவியர் விடுதியின் செயல்பாடுகளையும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், மாணவிகளின் படுக்கை வசதி குறித்தும் தொடர்புடைய அலுவலரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் கவிதப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்செல்வன், சீனிவாசன், தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.