திருவண்ணாமலை
முதியோர் இல்லம், காப்பகங்களில் கலெக்டர் ஆய்வு
|திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், காப்பகங்களில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், காப்பகங்களில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் என்று ஆய்வு செய்தார். அப்போது திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகரில் இயங்கி வரும் தாய் உள்ளம் என்ற முதியோர் இல்லத்தினை அவர் பார்வையிட்டார். அந்த இல்லத்தில் ஆண்கள் 24 பேரும், பெண்கள் 35 பேரும் என மொத்தம் 59 பேர்உள்ளனர். இந்த இல்லத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கழிவறை, தங்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளதா என கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான போர்வைகள் மற்றும் ஊன்று கோலை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
அதேபோல் சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு மறுவாழ்வு சங்கத்தில் இயங்கி வரும் பள்ளியில் காது கேளாதோர் மாணவர்கள் 189 பேர் உள்ளனர். அதில் 143 நபர்கள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். மீதமுள்ள 46 மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
காதுகேளாத இளம் சிறார்கள் 18 போ், அறிவுத்திறன் குறையுடையோர் 89 பேர், புறஉலகு சிந்தனையற்றோர் 6 பேர் என மொத்தம் 302 மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி முறை, கல்வி, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் சென்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்பென்னாத்தூர்
அதைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களுர் ஊராட்சியில் நீலாம்பாள் துரைசாமி ரெட்டியார் சங்கத்தின் மூலம் இயங்கி வரும் முதியோர் இல்லத்தினையும் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். இங்கு 10 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 32 முதியோர்கள் தங்கியுள்ளனர். அவர்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மேக்களுர் ஊராட்சியில் உள்ள க்யூர் மனநல காப்பகத்தில் வழங்கப்படும் உணவு, சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.