அரியலூர்
மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
|மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையத்தினை நேற்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளின் விவரம் குறித்து கேட்டறிந்து, பொதுமக்கள் கேட்கும் தகவல்களை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மேல்முறையீடு செய்ய விரும்புவோர், தங்களது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்ற 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் கட்டணமின்றி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்ய தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, தனித்துணை கலெக்டர் இளங்கோவன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.