நாமக்கல்
பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் கலெக்டர் உமா ஆய்வு
|ராசிபுரம் அருகே உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
215 பேர் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் 7 பட்டாசு தயாரிக்கும் சிறு ஆலைகளும், 18 பட்டாசு கிடங்குகளும், 31 நிரந்தர பட்டாசு கடைகளும் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி இதுவரை 215 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராசிபுரம் தாலுகா கீரனூரில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில், மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெடிபொருட்கள் உற்பத்தி செய்யும் இடம், சேமித்து வைக்கும் இடம் ஆகியவற்றில் அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா? என்பதை உறுதி செய்தார்.
கலெக்டர் ஆய்வு
மேலும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ தடுப்புக்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதா?, தீ தடுப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளதா?, அவசரகால வழிகள் உள்ளதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். வரைபடத்தில் உள்ளவாறு கட்டிட அமைப்பு உள்ளதா?, உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே இருப்பு உள்ளதா?, வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகளின் அளவு குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் உற்பத்தி செய்த வெடி பொருட்களை உடனடியாக குடோனில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்றும், அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் முறையாக பராமரித்திடவும் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.