தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமரவள்ளிக்கிழங்கு ஆலையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு
|பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு ஆலையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு ஆலையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அறிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் மரவள்ளிக்கிழங்கு ஆலை மூலம் அங்குள்ள பீணியாறு ஆக்கிரமிக்கப்படுவதாகவும், ஆற்றில் குழாய்கள் அமைத்து நீர் எடுப்பதாகவும், கிழங்கு கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் மரவள்ளிக்கிழங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கையின்பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து சில அறிக்கைகள் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பசுமை தீர்ப்பாயம் மூலம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கோரியிருந்தனர். அதன்பேரில் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பார்வையிட வந்தேன்.
ஆழ்துளை கிணறுகள்
பீணியாறு அருகே குளம் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினர். அது மழைநீர் சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து நிலத்தடி நீர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மேலும் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த முறை ஆய்வின் போதே அடைக்க உத்தரவிடப்பட்டது. அவைகள் அனைத்தும் அடைக்கபட்டுள்ளதா என ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளோம்.
ஆலையில் கழிவுநீர் இல்லை. சீமைக்கருவேல மரங்கள் அவர்களுடைய பட்டா நிலத்தில் வைத்துள்ளனர். அதில் 7 ஏக்கரில் மரங்களை அகற்றி வேறு மரங்கள் நட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், தாசில்தார் வள்ளி, உதவி பொறியாளர் கிருபா, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.