திருவள்ளூர்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.67 லட்சம் கடனுதவி - கலெக்டர் வழங்கினார்
|திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் கடனுதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று காலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார். பின்பு அவர் விவசாயிகளோடு கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, 'திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மணிகள் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான திறந்த வெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மணிகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் மணிகளை கூடுதல் பாதுகாப்புடன் சேமித்து வைக்க ஏதுவாக தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க முதன் முறையாக டெல்டா மாவட்டத்திற்கு இணையாக குருபுரம் கிராமத்தில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன கான்கிரீட் நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.12.50 கோடி நிதி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளில் முதற்கட்டமாக ரூ.2.81 கோடி செலவில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன நெல் சேமிப்பு கிடங்குகள் 11.02.2023 அன்று முதல்-அமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் விவசாயிகள் ஆண்டொன்றுக்கு பயன்பெறுவர். மீதமுள்ள நவீன சேமிப்பு கிடங்குகளின் கட்டுமான பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளதால் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 31.01.2023 வரையில் 1086 விவசாயகளிடமிருந்து 86 ஆயிரத்து 705 மெட்ரிக் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு டன் ஒன்றுக்கு ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.17 கோடியே 35 லட்சம் கரும்பு கிரயத் தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்பு திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பாக கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கி துறையின் மூலம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட "சிறப்பு வங்கி மேளா" மூலமாக தேர்வு செய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு ரூ.66.87 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.