அலுவலக வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர்
|மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற சேலம் மாவட்ட கலெக்டர் அங்கிருந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் உள் மற்றும் வெளிப்புறங்களில் குப்பைகள் சேராத வகையில் அவ்வப்போது தூய்மை படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், பல்வேறு அலுவலகங்களுக்கு கலெக்டர் கார்மேகம் திடீரென சென்று அங்கு அலுவலகம் எவ்வாறு தூய்மையாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் கார்மேகம், தரைதளம் அமைந்துள்ள பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் கிடப்பதை பார்த்தார். பின்னர் அவர், அந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும், குப்பைகளை அகற்றி அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளில் போட்டார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள், கலெக்டருடன் சென்று அங்கிருந்த குப்பைகளை அகற்றினர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த நபர்களிடம் நம் அலுவலகத்தை நேசிக்க தகுந்த இடமாக மாற்றும் வகையில் தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.