< Back
மாநில செய்திகள்
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு கல்வி பயிலும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு கல்வி பயிலும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

தினத்தந்தி
|
11 March 2023 11:37 AM IST

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்களோடு ''காபி வித் கலெக்டர்'' என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இதில் அவர் பேசும்போது:- கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 'பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

எனவே எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார். அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்களோடு ''காபி வித் கலெக்டர்'' என்ற தலைப்பில் அவர்களோடு கலெக்டர் கலந்துரையாடி அந்த மாணவிகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

மேலும் செய்திகள்