ராணிப்பேட்டை
மாணவர், மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
|மாணவர், மாணவி விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். தொடக்கப்பள்ளியில் தரையில் அமர்ந்து உணவை சாப்பிட்டார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டிகளை தயார் செய்யும் உணவு கூடத்தினை கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவின் தரத்தினை சாப்பிட்டு பரிசோதித்தார்.
பின்னர் நாள்தோறும் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கும் உணவின் வகைகளை கேட்டு அறிந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா தெற்கு தொடக்க பள்ளியில் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். பின்னர் தான் சாப்பிட்ட தட்டினை தானே எடுத்துச் சென்று கழுவினார்.
குறைகள் கேட்டறிந்தார்
பின்னர் ஆற்காடு நகராட்சி வார்டு எண் 9-ல் அமைந்துள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் காலை உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர்கள் விடுதியில் திடீர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளையும், குறைகளையும் கேட்டு அறிந்தார்.
ஆய்வின்போது ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், தாசில்தார் சுரேஷ், நகராட்சி பொறியாளர் கணேசன், நகரமன்ற உறுப்பினர்கள் பி.டி.குணா, செல்வம் காலை உணவு திட்ட ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.