< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் அருகே வெளிநாட்டு பயணிகளுடன் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரம் அருகே வெளிநாட்டு பயணிகளுடன் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்

தினத்தந்தி
|
17 Jan 2023 6:33 PM IST

மாமல்லபுரம் அருகே வெளிநாட்டு பயணிகளுடன் பொங்கல் வைத்து கலெக்டர் ராகுல்நாத் கொண்டாடினார்.

ஆண்டுதோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அருகில் உள்ள ஏதாவது ஒரு பகுதியில் விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தட்ஷண சித்ரா கலை பண்பாட்டு மையத்தில் நடந்தது.

இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி த.சக்திவேல் வரவேற்றார். முன்னதாக மாமல்லபுரத்தில் பல்வேறு ஓட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகள் 50 பேர் விழா நடக்கும் முட்டுக்காடு பகுதிக்கு பஸ் மூலம் மாமல்லபுரத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

முட்டுக்காடு பகுதியை சென்றடைந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்கிய அவர்களுக்கு தமிழக கலாசாரப்படி மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல் ஆகியேருடன் இணைந்து வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் அம்மனுக்கு படையலிட்டு, சூரிய பகவானை வழிபட்டு மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் தயார் செய்யப்பட்ட மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பிறகு இசை நாற்காலி போட்டி மற்றும் மண்பானை உடைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் பொங்கல் திருநாளில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை பார்த்து உற்சாகம் அடைந்த சில பயணிகள் கிராமிய கலைக்குழுவினரும் இணைந்து மேளம் அடித்தும், தலையில் கரகம் வைத்து ஆடியும் மகிழ்ந்தனர். கலெக்டர் ராகுல்நாத் தலையில் கரகம் வைத்து ஆடினார். சுற்றுலா பயணிகளுடன் மாட்டு வண்டியிலும் சென்றார். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி போட்டியும் நடத்தப்பட்டன. அதில் வெளிநாட்டு பயணிகள் ஏறி சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பொங்கல் விழா கொண்டாடும் விதம் குறித்து வெளிநாட்டு பயணிகளுக்கு மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், அ.மதன், எஸ்.யுவராஜ், கொ.சி.வரதராஜன் உள்ளிட்டவர்கள் விளக்கி கூறினார். இந்த மாட்டு பொங்கல் விழாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஆலந்து, கனடா, பெல்ஜியம், சுவீஸ், டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பயணிகள் பங்கேற்றனர். சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக மாமல்லபுரத்திற்கு சீன பயணிகள் வரத்து இல்லாததால் அவர்கள் யாரும் இந்த பொங்கல் விழாவில் காணப்படவில்லை.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவின்பேரில் இந்த விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்