< Back
மாநில செய்திகள்
மாயனூர் கதவணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விரைவில் நஷ்டஈடு-கலெக்டர் உறுதி
கரூர்
மாநில செய்திகள்

மாயனூர் கதவணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விரைவில் நஷ்டஈடு-கலெக்டர் உறுதி

தினத்தந்தி
|
31 Dec 2022 12:58 AM IST

மாயனூர் கதவணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு விரைவில் வழங்கப்படும் என கலெக்டர் பிரபு சங்கர் உறுதி அளித்தார்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கடந்த மாதம் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த விவரங்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நடப்பாண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் கரூர் மாவட்டத்தில் அதிகளவில் நெல் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் தரமாக விளையும் நெல்களை ஆலைகளின் மூலம் அரிசியாக்கி கரூர் ரேஷன் கடைகள் மூலம் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதன் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் நமது மாவட்டத்தில் விளையும் நெல் மூலம் உற்பத்தியாகும் அரிசியினை நமது மாவட்ட மக்களே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு

மாயனூர் கதவணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் அவர்களுக்கான உரிய நஷ்ட ஈடு விரைவில் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதையடுத்து விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ரெங்கநாதபுரம் கால்வாயில் குறுக்கே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். மாயனூரில் நிலையான மீன் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். கட்டளை மேட்டு வாய்க்காலில் விலை நிலங்களில் சாகுபடி செய்வதற்காக தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு காப்பீடு தொகை வழங்குவது குறித்தும், புலியூர் வாய்க்காலில் வரும் சாயக்கழிவுகளால் விளைநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 152 மனுக்களை விவசாயிகள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்