கடலூர்
கடலூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்
|கடலூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க விழா சி.கே. பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி வரவேற்றார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலை திருவிழா போட்டிகள்
2023-2024-ம் ஆண்டு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபடி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது.
இதன்படி கடலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது.
நடனம்
இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் என 3 பிரிவுகளாக கவின் கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கலையரசி விருது
மேலும் கலைத்திருவிழா தனிபோட்டிகளில் கலந்து கொண்டு அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவுகளில் தனிதனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன் ஊக்கப்படுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
விழாவில் மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர் நடராஜன், சி.கே. பள்ளி தாளாளர் அமுதவள்ளி, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சரவணக்குமார் நன்றி கூறினார்.