< Back
மாநில செய்திகள்
தரமற்ற ஹெல்மெட் விற்றால் கடும் நடவடிக்கை    விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

தரமற்ற ஹெல்மெட் விற்றால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
3 Nov 2022 12:15 AM IST

கடலூர் மாவட்டத்தில் தரமற்ற ஹெல்மெட் விற்றால், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீட்டு உபயோக பொருட்கள்

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு முகமை அண்மையில் நடத்திய ஆய்வில் விற்பனையாளர்கள் சிலர் தரமற்ற மற்றும் தரக்கட்டுப்பாடற்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இவற்றில் தலைக்கவசம், வீட்டு உபயோக பிரஷர் குக்கர் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய முக்கிய வீட்டு உபயோக பொருட்கள் தரமற்றதாகவும், தர நிர்ணய சான்று பெறாததாகவும் இருந்தது. இவை பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது.

மேலும் இச்செயல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறும் குற்றமாகும். எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், பொருட்கள் சேமிப்பு கிடங்கு வைத்திருப்போர் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் தரமற்ற BIS தரக்கட்டுப்பாடு சான்று பெறாத பொருட்களை உற்பத்தி செய்வதோ, சேமிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. இதை மீறி செயல்பட்டால், விதிகளை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்படும்.

முற்றிலும் தடை

அன்றாட வீட்டு உபயோக பொருட்களான தலைக்கவசம், வீட்டு உபயோக பிரஷர்குக்கர், சமையல் எரிவாயு சிலிண்டர், எலக்ட்ரிக் இம்மர்ஷன் வாட்டர் ஹீட்டர், தையல் எந்திரம், நுண்ணலை அடுப்பு, வீட்டு உபயோக எரிவாயு அடுப்பு ஆகியவை தரக்கட்டுப்பாடு சான்று பெறாமல் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தரமற்ற பொருட்கள் உற்பத்தி, சேமித்தல் மற்றும் விற்பனை நடைபெறுகிறுதா? என்பதை மாவட்ட அளவிலான அலுவலர்களால் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது தரமற்ற, நுகர்வோரின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி, சேமித்தல், விற்பனை செய்யும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 1981 மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2003-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, விற்பனையாளர்கள் அனைவரும் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களும் தரமற்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்