நாமக்கல்
ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில்1.70 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் திட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
|பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் 1.70 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் விட்டு இருப்பு வைக்கும் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
மீன் குஞ்சுகள்
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டு இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், தமிழகத்தில் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்க ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022- 2023-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.1.24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரிக்க செயல்படுத்தப்படுகிறது.
பிழைப்புத்திறன்
நாட்டின மீன்வளத்தினை பாதுகாக்க நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் ஆகிய மீன்குஞ்களின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்துவிடும்.
இந்த திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள், மீன் விரலிகளாக 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்த்தெடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் 1.70 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் யுவராஜ், மீனவர் சங்கத்தலைவர் ராஜா, மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கலைவாணி, கவிதா, உதவி ஆய்வாளர் கோகிலவாணி, அரசு அலுவலர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.