< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்:  146 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடியில் நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: 146 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

தினத்தந்தி
|
15 Aug 2022 5:55 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் 146 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

நாமக்கல்லில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் 146 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

சுதந்திர தின விழா

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டனர். தொடர்ந்து அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 14 ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் பேண்டுவாத்திய குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கேடயங்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சத்து 63 ஆயிரத்து 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 40 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 103 அரசுதுறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் புத்தகத்திருவிழாவில் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கி கொள்வதற்கான பரிசு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார்.

2022-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளிகள், சிறந்த நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியின் போது தங்களுக்கு கிடைத்த தங்கம், பணம் உள்ளிட்டவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் என 20 நபர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

கலைநிகழ்ச்சிகள்

விழாவையொட்டி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி பள்ளி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.சமுத்திரம் ஞானோதயா சி.பி.எஸ்.இ பள்ளி, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாச்சல் பாவை கல்லூரி என மொத்தம் 708 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு புத்தகத்திருவிழாவில் தலா ரூ.300 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான பரிசு அட்டைகள், பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சித்தலைவர் சாரதா, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், மணிமாறன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தேசிய கொடியில் உள்ள ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தை வெளிப்படுத்தும் வகையில் முககவசம் அணிந்து வந்து அசத்தினர். இதேபோல் பாராட்டு சான்றிதழ் பெறுவோர் புகைப்படம் எடுத்து கொள்ள வசதியாக 'செல்பி ஸ்பார்ட்' ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்