< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்  ஆகஸ்டு 2, 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா  கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் ஆகஸ்டு 2, 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

தினத்தந்தி
|
14 July 2022 9:29 PM IST

கொல்லிமலையில் ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

கொல்லிமலையில் ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவு துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

பசுமை திருவிழா

இந்த ஆண்டு கொல்லிமலையில் கொண்டாடப்பட உள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை பசுமை திருவிழாவாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது.

மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில் வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்