கன்னியாகுமரி
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.50 ஆயிரம் வசூல்
|சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.50 ஆயிரம் வசூலானது.
சுசீந்திரம்:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு மதிய வேளையில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் மற்றும் அன்னதான திட்டத்துக்கு காணிக்கை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலின்முகப்பு பகுதியில் அன்னதான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப் படுவது வழக்கம். அதன்படி நேற்று அந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் ஆய்வாளர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.50 ஆயிரத்து 975 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.