புதுக்கோட்டை
வேங்கைவயல் வழக்கில் மரபணு பரிசோதனைக்காக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
|வேங்கைவயல் வழக்கில் மரபணு பரிசோதனைக்காக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதனை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல் வழக்கு
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தத்தை கலந்த நபர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் நேரடி சாட்சியங்கள், தடயங்கள் எதுவும் சிக்காததால் அறிவியல் ரீதியாக தடயங்கள், மாதிரிகளை சேகரித்து அதனை ஒப்பிட்டு நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் விசாரணை செய்யப்பட்டவர்களில் சிலரிடம் மரபணு பரிசோதனை நடத்த திட்டமிட்டு கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 11 பேரில் 3 பேர் மட்டுமே மரபணு பரிசோதனைக்கு ஒத்துக்கொண்டனர். அவர்களது ரத்த மாதிரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 8 பேர் ஒத்துழைக்காத நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
ரத்த மாதிரி சேகரிப்பு
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக மரபணு பரிசோதனைக்காக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர். அதன்படி இறையூரை சேர்ந்த சங்கர் (வயது 36), பிச்சை (60), சேகர் (35), சிதம்பரம் (46), காந்தி (43), சக்திவேல் (45), காவேரி நகரை சேர்ந்த சிதம்பரம் (49), சண்முகம் (50), வேங்கைவயலை சோ்ந்த முருகன் (56), சதாசிவம் (59) ஆகிய 10 பேரிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
இந்த ரத்த மாதிரிகள் புதுக்கோட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இந்த ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வார்கள்.
பரிசோதனையை ஒப்பிடுதல்
இந்த வழக்கில் ஏற்கனவே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதில் அசுத்தத்தில் உள்ள மரபணுக்கள், நீரில் கலந்திருந்த மரபணுக்கள் ஆகியவை தற்போது சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். இதில் அவற்றோடு இவை ஒன்றாக காட்டினால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த பரிசோதனை முடிவு வர குறைந்தது 3 மாதங்கள் ஆகலாம் எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி சேகரித்து அனுப்பப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதேபோல் ஆயுதப்படை போலீஸ்காரர் முரளிராஜா உள்பட 2 பேரின் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அந்த முடிவும் இன்னும் வரவில்லை என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொிவித்தனர்.
ஒரு நபர் ஆணையம்
இந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக மரபணு பரிசோதனைக்காக மேலும் சிலரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படுமா? என சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டபோது, தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் கடந்த 6-ந் தேதி முதல் விசாரணையை தொடங்கியது.
இதில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முகாந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை விசாரித்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் 2 மாத காலத்திற்குள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவார்களா? என்பது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அடுத்தடுத்த புலன் விசாரணையில் தான் தெரியவரும்.