< Back
மாநில செய்திகள்
இடிந்து விழும் நிலையில் பாலத்தின் பக்கவாட்டு சுவர்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

இடிந்து விழும் நிலையில் பாலத்தின் பக்கவாட்டு சுவர்

தினத்தந்தி
|
21 Oct 2023 9:07 PM GMT

தஞ்சை பெரிய கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் பாலத்தின் பக்கவாட்டுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய கோவில்

தஞ்சையில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாய் செல்கிறது. அதன் குறுக்கே பொதுமக்கள், கோவிலுக்கு வருபவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக பாலம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த பாலம் தற்போது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பாலத்தில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இவற்றால் பாலத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது.

இடிந்துவிடும் நிலை

அதுமட்டுமின்றி பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள பக்கவாட்டுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. தஞ்சையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சுவரின் கீழ் பகுதியில் உள்ள மண் சரிய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கல்லணைக்கால்வாய்க்குள் விழுந்துவிடும் நிலை உருவாகி உள்ளது.மேலும், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பாலத்தின் பக்கவாட்டுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்