கடலூர்
இடிந்து விழுந்த பள்ளிக்கூட சுற்றுச்சுவர்
|கருவேப்பிலங்குறிச்சியில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்ததால் மாணவர்களின் பெற்றார் அதிர்ச்சியடைந்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பள்ளிக்கூட வளாகத்தில் அங்கன்வாடி மையமும் இயங்குகிறது. இதில் 20 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இங்குள்ள ஒருகட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அங்கிருந்த மாணவர்கள், அதே வளாகத்தில் உள்ள ஓடு போட்ட கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தினசரி வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தில் உள்ள ஓடுகளும் சரிந்து கீழே விழும் நிலையில் தான் இருக்கிறது. இதேபோல் அங்கன்வாடி மையமும் சிமெண்ட் ஓடு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
மேலும், பள்ளிக்கூடத்தை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் அஸ்திவாரங்கள் இல்லாமல் அமைக்கப்பட்டதாகும். தற்போது பெய்த மழையின் காரணமாக, சுற்றுச்சுவரில் தண்ணீர் இறங்கி ஈரபதத்துடன் இருந்தது.
இந்நிலையில் பள்ளியின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
இருப்பினும்,சுவர் இடிந்து விழுந்தது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்து இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை பார்த்தனர்.
ஏற்கனவே இங்குள்ள கட்டிடங்கள் அதன் உறுதிதன்மையை இழந்து இருக்கும் சூழலில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருப்பது மாணவர்களின் பெற்றோர்களை அச்சமடைய செய்துள்ளது. இதுபோன்று இருந்தால் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்று தெரிவித்தபடி ஆதங்கத்துடன் சென்றனர்.
நடவடிக்கை தேவை
இருப்பினும், பள்ளி நேற்று வழக்கம் போல் இயங்கியது. மாணவ, மாணவிகள் வழக்கம் போல் வருகை தந்திருந்தனர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற விபரீதங்கள் ஏதும் நிகழும் முன்பு தடுக்க அதிகாரிகள் முன்வருவதுடன், இந்த பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை அறிந்து மாணவர்கள் அச்சமின்றி கல்வி பயில தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.