கோல்டு காபி, பலாப்பழ ஐஸ்கிரீம்... - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்
|ஆவினில் புதிய 10 பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் உள்ள அவின் இல்லத்தில் ஆவினில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் - ரூ.45, 200மி.லி. குளிர்ந்த காஃபி - ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நாசர் கூறியதாவது:-
ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, வித்தியாசமான சூழலில், எந்தவிதமான கலப்பும் இல்லாமல், ரசாயனங்களும் சேர்க்காமல், முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல் இந்த 10 புதிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம்.
கறந்த பால், கறந்தபடி தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக்கப்பட்டு இன்று 10 புதிய பொருட்களை வெளியிட்டிருக்கிறோம். பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்டு காஃபி, வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் கேக் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகார்ட், ஆவின் பால் பிஸ்கெட், ஆவின் வெண்ணெய் முறுக்கு, போன்றவை எல்லாம் இன்றைய தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
இந்த புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கின்றோம். ஆவின் குடிநீர் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார். தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு காரணமாக ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.