ராமநாதபுரம்
பிளாஸ்டிக், நரம்பு கயிறு வருகையால் தேங்காய் நார் கயிறு விற்பனை மந்தம்
|பிளாஸ்டிக், நரம்பு கயிறு வருகையால் தேங்காய் நார் கயிறு விற்பனை மந்த நிலையை அடைந்து உள்ளது. எனவே இந்த தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
பிளாஸ்டிக், நரம்பு கயிறு வருகையால் தேங்காய் நார் கயிறு விற்பனை மந்த நிலையை அடைந்து உள்ளது. எனவே இந்த தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கயிறு திரிக்கும் தொழில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெகுநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் கயிறு திரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரெகுநாதபுரம், பெருங்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேங்காய் நிறுவனங்களில் தேங்காய் நார் தும்பிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலானது நடைபெற்று வருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிற்கு கயிறு திரிக்கும் தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் தொழில் முழுமையாக அழிந்து விட்டதாகவும் தொழிலாளர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
இது குறித்து முத்துப்பேட்டையில் கயிறு திரிக்கும் தொழிலாளி ராஜா கூறியதாவது:-
வேலை நேரம் அதிகம்
ரெகுநாதபுரம், பெருங்குளம் ஊர்களில் உள்ள தென்னை மட்டை கம்பெனிகளில் இருந்து தேங்காய் நார் என்று சொல்லக்கூடிய தும்புகளை விலைக்கு வாங்குவோம். 35 கிலோ எடை கொண்ட தேங்காய் நார் பண்டல் ரூ.900-த்திலிருந்து ரூ.1000 வரை விலை கொடுத்து வாங்குவோம். தேங்காய் நாரிலிருந்து தான் இந்த கயிறை திரித்து உற்பத்தி செய்கிறோம்.
சக்கரம் போன்ற அமைப்புடைய எந்திரத்தில் தேங்காய் நாரை கையால் திரித்து அதை அந்த எந்திரத்தின் நுனியில் கட்டி அதன் பின்னர் தேங்காய் நாரை தொடர்ந்து கையால் திரித்து அந்த எந்திரத்தை ஒருவர் அமர்ந்து சுற்ற, சுற்ற நார் கயிறாக திரிக்கப்படும். வேலை நேரம் அதிகம். இதில் லாபம் என்பது மிக குறைவு என்றே சொல்லலாம் முத்துப்பேட்டை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கயிறு ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம், மண்டபம், பரமக்குடி, சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டு 5 ரூபாய்க்கு எங்களிடம் வாங்கி கடைகளில் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். சாரக்கட்டு கயிறு என்றும் இதை அழைக்கலாம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கயிறை கொச்சை கயிறு என்றும் சொல்வார்கள்.
விற்பனை மந்தம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கயிறு தொழில் சிறப்பாக இருந்தது. சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கயிறு மற்றும் நரம்பு கயிறுகளின் வருகையால் கயிறு விற்பனையும் மந்தமாகிவிட்டது. தற்போது பலர் இந்த கயிறு திரிக்கும் தொழில் செய்வதை நிறுத்திவிட்டனர். எனவே அரசு இந்த கயிறு திரிக்கும் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கயிறு விற்பனையை அதிகரிக்க அரசு சார்பில் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.