திண்டுக்கல்
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி: திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
|கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி காரணமாக திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கோவையில் பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதேபோல் கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. அதோடு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரம் பா.ஜனதா அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பஸ் நிலையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் முக்கிய இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
அங்கு சுழற்சி முறையில் தலா 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா அலுவலகம், இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.