< Back
மாநில செய்திகள்
கோவை:  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்கு
மாநில செய்திகள்

கோவை: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
26 Oct 2023 3:46 AM GMT

கோவை உக்கடத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அந்நாட்டு கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 20-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை உக்கடத்தில் கடந்த 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இஸ்ரேல் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ள மத்திய அரசை கண்டித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை உரிய மக்களிடம் வழங்கி அங்கு மக்கள் சுதந்திரத்துடனும், அமைதியாகவும் வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

இந்நிலையில், கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மீது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், ஜமா-அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்