கோவை கார் வெடிப்பு சம்பவம் - வீடு வீடாக சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த போலீசார்..!
|கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, வீடுகள், வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 28 )என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணைக்கு சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு பெரும் உதவியாக இருந்தது. வெடித்து சிதறிய கார் எங்கிருந்து, எந்த வழித்தடத்தில் வந்தது, காரில் இருந்த நபர் யார், அவரது வீட்டிலிருந்து காரில் மூட்டையை ஏற்றியது போன்ற பல்வேறு தகவல்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருந்தன.
இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநகரில் பொதுமக்கள் சார்பில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாநகரில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர காவல்துறை சார்பில் மட்டும் பொது இடங்கள், சிக்னல் சந்திப்புகளில் சிசிவிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் காட்சியை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.