< Back
மாநில செய்திகள்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
27 Oct 2022 2:51 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தை மறுசீரமைப்பு செய்து அங்கு அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அதன்பின்னர் தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்தை மறுசீரமைத்தும், 13 அடி உயர அம்பேத்கரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.

சனாதனம் நிறைந்த பழைய இந்தியாவை தகர்த்து எறிந்து விட்டு சமத்துவம் நிலவும்

புதிய இந்தியாவை கட்டமைப்பது அம்பேத்கரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில்

திமுகவுடன் ஜனநாயக சக்திகள் இணைந்து களத்தில் இறங்கி இருப்பது பாராட்டுதற்குரியது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கும் என காவல்துறை அஞ்சுகிறது. எனவே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியானது, பொருத்தமானது. ஆனால், தேசிய புலனாய்வு முகமை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை

கையிலெடுப்பது ஏற்புடையது அல்ல. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை கையிலெடுத்திருக்கும் நிலையில்,

பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்