கோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை
|கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான, சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், "அதில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்" என்றார்.
அப்போது அவரிடம் இந்தி திணிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தி திணிப்பு கூடாது. வேண்டுமென்றே இந்தியை திணிக்கிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்கவில்லை என கூறினார்.