சென்னை
கோவை கார் வெடிப்பு "காவல்துறை அறிக்கை விசித்திரமாக உள்ளது"-பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
|இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை.
சென்னை
சென்னையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளிக்கு முன்தினம் அக்.23, கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்ததாக செய்தி வந்தது. பின்னர், அந்தக் காரிலிருந்த சிலிண்டர் வெடித்துள்ளது என்று செய்தி வந்தது. அதன்பிறகு தமிழக காவல்துறை டிஜிபி, ஏடிஜிபி போன்றோர் விரைந்து கோவை சென்றனர்.
பின்னர், மாலைக்குள் ஒரு 6 தனிப்படைகள் அமைத்தனர். அதன்பிறகு எந்த செய்தியும் இல்லை. பாஜக வலியுறுத்திய பின்னர், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக டிஜிபி செய்தியாளர்களிடம் கூறினார். இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பா.ஜ.க.வுக்கு உள்ளது.
கோவை மாநகரம் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்பது ஜூன் 2019-ல் அனைவருக்கும் தெரியவந்தது. 1998-ல் நடந்த வெடிகுண்டு விபத்தில் 58 அப்பாவிகள் பலியாகினர். அத்தனை சென்சிட்டிவான ஒரு பகுதி. அதன்பின்னர் ஜூன் 2019-ல் என்ஐஏ 5 நபர்களை கோவையில் கைது செய்தனர். அவர்கள் அனைவருமே முகமது அசாருதீன் என்பவர் மூலம், கேரளாவில் இருக்கும் அபுபக்கர் என்பவரோடு தொடர்புடையவர்கள்.
அவர்கள் இருவருமே இலங்கையில் ஒரு தேவாலயத்தில் ஈஸ்டா் அன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் ஜெஹ்ரான் ஹாஸ்மி ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் பேஸ்புக், டெலிகிராம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
நிறைய மனிதர்களை மூளைச்சலவை செய்து, ஒரே நாளில் ஏப்.21, 2019-ல் 3 தேவாலயங்கள், 3 உயர்தர நட்சத்திர விடுதிகள், வேறு வேறு நிறுவனங்கள் என தாக்குதல் நடத்தி ஈஸ்டர் தினத்தில் கிட்டத்தட்ட 269 பேர் உயிரிழந்தனர்.
இந்த விசாரணை சிரியா, துருக்கி என சர்வதேச அளவில் நடந்தது. அதன் விசாரணை இந்தியாவில் குறிப்பாக கோவைக்கு அருகில் இருக்கும் பாலக்காட்டில் நடந்தது. இதில் பாலக்காட்டில் அபுபக்கர், கோவையில் அசாருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதில் தொடர்பு இருக்கலாம் என்ற வகையில், காவல்துறை சிலரிடம் விசாரணை நடத்தினர். ஜமேசா முபினிடமும் அந்த விசாரணை நடத்தப்பட்டது. அக்.23 விபத்திலும் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபர் ஜமேசா முபின் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தீவிரவாத தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. வலியுறுத்தியும்கூட காதில் விழாத மாநில அரசு, காவல்துறை இந்த விபத்து ஏதோ சிலிண்டர் வெடித்தது போலவே ஒரு ஜோடனையை செய்து கொண்டுள்ளனர்.
பின்னர், அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை.
கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல். இரண்டு தினங்களுக்கு முன், காரை ஓட்டி இறந்த ஜமேசா முபின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார்.
என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் படையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்" என்று அவர் கூறினார்.