< Back
மாநில செய்திகள்
கோவை கார் குண்டுவெடிப்பு என்.ஐ.ஏ. அறிக்கையில் பரபரப்பு தகவல்...!
மாநில செய்திகள்

'கோவை கார் குண்டுவெடிப்பு' என்.ஐ.ஏ. அறிக்கையில் பரபரப்பு தகவல்...!

தினத்தந்தி
|
11 Nov 2022 9:40 AM IST

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கோவை,

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிந்தவுடன் என்.ஐ.ஏ. சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

குண்டுவெடிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் குண்டு வெடித்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டிய ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். ஐ.எஸ். பயங்கரவாதியான அவர், காரில் வெடிபொருட்கள் நிரப்பி மதப்பிரச்சினை உருவாக்கும் விதத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட திட்டமிருந்ததும், எதிர்பாராமல் அந்த வெடிகுண்டு வெடித்து அவரே அதற்கு பலியானதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரடி சோதனை

இந்த சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் ஜமேஷா முபின் ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் வாங்கியதும், அந்த வெடிபொருட்களை கொண்டு முக்கியமான பகுதியை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தி, அதன்மூலம் பெரும் கலவரத்தை அரங்கேற்ற இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நாகை என தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும், கேரளாவில் பாலக்காடு பகுதிகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் களமிறங்கினர். பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் - அலுவலகங்கள் என மொத்தம் 43 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சில டிஜிட்டல் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





மேலும் செய்திகள்